ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள மத்திய பாஜக அரசு, 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் 11 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலையும் நடத்து குறித்து தீவிர பரிசீலனையில் உள்ளது. இதற்காக, தே.ஜ.கூட்டணி ஆட்சி அமையும் மாநில அரசுகளை முன்கூட்டியே கலைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசு, “ஒரு நாடு ஒரே தேர்தல்” மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டு வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு “ஒரு நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளித்தது. பின்னர், நாடாளுமன்ற குழு தனது அறிக்கையை, குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு கிடைப்பது சாத்தியமில்லை என கருதப்படுவதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களை இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது
அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையாக ஆட்சி செய்யும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 2034-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே, அதாவது 2029 மக்களவைத் தேர்தலுடன், ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, தே.ஜ. கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் 5 ஆண்டு காலம் முடிவதற்கு முன்பாகவே சட்டமன்றங்களைக் கலைக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது தே.ஜ.கூட்டணி ஆட்சி செய்யும் 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 11 மாநிலங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் (2029-க்கு முன்) தேர்தல் வரவுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், மற்றும் குஜராத் மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெற உள்ளது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஏற்கனவே மக்களவையுடன் இணைந்தே சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2029 ஆம் வருடம் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பலத்தை எதிர்ப்பு தெரிவித்தாலும், “ஒரு நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எனினும், இதற்கான சட்டத்தை திருத்தங்களை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு செய்தால் மட்டுமே, மத்திய அரசின் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

