தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தெற்கு மண்டல அதிகாரிகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, அந்நிறுவனம் தயாரிக்கும் சில மதுபான வகைகளில் இயற்கைக்கு இணையான மற்றும் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் (Natural Identical and Artificial Flavoring Substances) பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறு FSSAI உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி,
- மேற்கண்ட 11 மதுபான வகைகளையும் கிடங்குகளில் இருந்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பக் கூடாது.
- FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள் மற்றும் விடுதிகளுக்கு இந்த மதுபானங்களை வழங்கக் கூடாது.
- மறுஉத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மதுபான வகைகள்:
- VSOP EXSHAW GOLD BRANDY
- LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY
- McDowell’s VSOP Brandy
- NO.1 McDowell’s Fine Brandy
- MENSCLUB Deluxe Brandy
- HONEY BEE FINE BRANDY
- ENRICA VSOP SELECT BRANDY
- ENRICA PLATINUM RESERVE XO BRANDY
- ENRICA PREMIUM FRENCH BRANDY
- VEERAN SPECIAL BRANDY
- ENRICA OLD INDIE CLASSIC DARK RUM
FSSAI மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

