தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மீண்டும் PSTM முன்னுரிமை பெற கட்டுப்பாடு: 2010 முதல் நியமனங்கள் செல்லும் என அறிவிப்பு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

“தமிழ் வழியில் படித்த நபர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளித்தல் (திருத்தம் மற்றும் செல்லுபடியாக்குதல்) சட்டம், 2026” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டம், தமிழ்நாடு சட்ட எண் 12/2026 ஆகும்.
இச்சட்டத்திற்கு தமிழக ஆளுநர் கடந்த ஆகஸ்ட் 6, 2026 அன்று ஒப்புதல் அளித்த நிலையில், அது ஆகஸ்ட் 11, 2026 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
நேரடி நியமனத்துக்கு புதிய விளக்கம்
சட்டத் திருத்தத்தில், “நேரடி நியமனம்” என்பதற்கான வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது இரண்டும் அடிப்படையாக கொண்டு அரசுப் பணிகளில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மட்டுமே நேரடி நியமனம் எனக் கருதப்படும்.

அதேநேரத்தில், பணியிட மாற்றம் (Recruitment by Transfer) மூலம் செய்யப்படும் நியமனங்கள் நேரடி நியமனமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் முன்னுரிமை பெறுவதில் கட்டுப்பாடு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் PSTM (Persons Studied in Tamil Medium) முன்னுரிமை தொடர்பாகவும் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ் வழி முன்னுரிமை அடிப்படையில் ஏற்கெனவே அரசுப் பணியில் சேர்ந்த ஒருவர், மீண்டும் அதே ஊதிய நிலை கொண்ட மற்றொரு பணிக்கு PSTM முன்னுரிமையை பயன்படுத்த முடியாது.
அதிக ஊதிய நிலை கொண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் போது மட்டுமே மீண்டும் தமிழ் வழி முன்னுரிமையை கோர முடியும்.
எனினும், இந்தச் சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியாவதற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் செல்லும்
இந்தச் சட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, 2010 செப்டம்பர் 7 முதல் 2026 சட்டம் வெளியிடப்பட்ட நாள் வரை தமிழ் வழி முன்னுரிமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அரசுப் பணி நியமனங்களும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் சட்டபூர்வமானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் வழங்கப்பட்டு வரும் முன்னுரிமையை சட்ட ரீதியாக உறுதி செய்வதுடன், அதன் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

