தமிழகத்தில் தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழர் மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் ‘சீர்’ என்பது அன்பு, பாசம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், மணப்பெண்களுக்கு அரசே அண்ணனாக இருந்து சீர்வரிசை வழங்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 22 காரட் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் குடும்ப வருமானம் உள்ள பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்ட நாள்முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும்.
தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவைகள் தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டம், 1998-ன் அடிப்படையில் வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலை இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) நிர்ணயிக்கும் தங்க விலையின் அடிப்படையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
இத்திட்டத்துக்கான விரிவான தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

