ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.10,000 வரை கடன் – புதிய கடன்களுக்கும் புதுப்பிப்புகளுக்கும் பொருந்தும்
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தங்க நகையின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 75 சதவீதம் அல்லது ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு கிராமுக்கு அதிகபட்சம் ரூ.7,000 வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வரம்பு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCB) தங்களது கிளைகள் மூலம் வழங்கும் நகைக்கடனுக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கும் இடையிலான வட்டி விகித வேறுபாடு சீரமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, PACCS-க்கு DCCB விதிக்கும் நகைக்கடன் வட்டி, DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக்கடன் வட்டியை விட குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், PACCS-ன் லாப வரம்பு 2.25 சதவீதத்துக்கு மிகாமல் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கடன் வரம்பு புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கும், ஏற்கெனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக்கடன்களுக்கும் பொருந்தும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

