ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 2025–26-ஆம் ஆண்டுக்கான உதவி இயக்குநர் பதவிக்கான தற்காலிகத் தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (BDO) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணை (வா) எண்.306-ஐ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 28.09.2026 அன்று வெளியிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் பரிந்துரைகள் மற்றும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில், தகுதியுடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குநர் நிலையில் தற்காலிகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வரிசை எண்கள் 1 முதல் 60 வரையிலான அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தற்காலிகத் தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்தகட்ட அலுவலர்களுக்கும் பதவி உயர்வு அளித்து, பல்வேறு மாவட்டங்களில் புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தஞ்சாவூரில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிய எஸ். ஜான் கென்னடிக்கு, புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை–வடக்கு) பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். பிரேமலதாவுக்கு, கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பதவியும், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ. விஜயலட்சுமிக்கு, திருச்சி மாவட்ட உதவி திட்ட அலுவலர் (ஊதிய வேலைவாய்ப்பு) பதவியும் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் டி. ரவீந்திரனுக்கு, சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை–மேற்கு) பதவியும், புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பி. வெங்கடேசனுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உதவி இயக்குநர் நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு, புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பதவி உயர்வு பெற்ற அலுவலர்களை தற்போதைய பணியிடங்களில் இருந்து விடுவிப்பதற்கு முன்பு, அவர்கள் மீது குற்றச்சாட்டு அல்லது தண்டனை நடவடிக்கைகள் நிலுவையில் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் தங்களுக்குப் பதிலாக மாற்று அலுவலர் பொறுப்பேற்கும் வரை காத்திருக்காமல், உடனடியாக தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ள புதிய பணியிடங்களில் பணியில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


