கன்னியாகுமரி ஆட்சியர் சுற்றறிக்கை: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் கொண்டு வரும் பணத்தின் மூலத்தையும், தொகையையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், ஐ.ஏ.எஸ்., பிறப்பித்துள்ள சுற்றறிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், கணக்கில் வராத பணம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, அரசு அலுவலகங்களுக்கு பணத்துடன் வரும் ஒவ்வொரு ஊழியரும், அந்தப் பணத்தின் மூலம், தொகை மற்றும் பணம் கொண்டு வரப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட பணப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அந்தப் பதிவேட்டை தினசரி மேற்பார்வை அதிகாரி ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகப் பணிக்கு அவசியமான சூழ்நிலையைத் தவிர அதிக அளவில் பணம் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை முறையாகப் பதிவு செய்யாமல் வைத்திருப்பது கணக்கில் வராத பணமாகக் கருதப்படுவதுடன், உரிய விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள சமூக ஆர்வலர்கள், பணத்தின் மொத்தத் தொகையை மட்டும் பதிவு செய்வதுடன் நிறுத்தாமல், கொண்டு வரப்படும் பணத்தில் உள்ள ரூ.500, ரூ.200, ரூ.100 உள்ளிட்ட ஒவ்வொரு மதிப்பிலான நோட்டுகளின் எண்ணிக்கையையும் தனித்தனியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதாரணமாக, ரூ.10,000 கொண்டு வரப்பட்டால், அதில் ரூ.500 நோட்டுகள் எத்தனை, ரூ.200 நோட்டுகள் எத்தனை, ரூ.100 நோட்டுகள் எத்தனை என்பதையும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் பின்னர் பணம் மாற்றப்பட்டதா அல்லது கூடுதல் பணம் சேர்க்கப்பட்டதா என்பதையும் எளிதில் சரிபார்க்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் ஊழலைத் தடுப்பதற்கும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வைத்திருக்கும் பணம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் சுற்றறிக்கை முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இந்த நடைமுறையை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தாமல், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் பொதுவான வழிகாட்டுதலாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தின் விவரங்களையும், உண்மையில் ஊழியர்களிடம் இருக்கும் பணத்தையும் அவ்வப்போது திடீர் ஆய்வு மூலம் சரிபார்க்க வேண்டும். அப்போதுதான் சுற்றறிக்கையின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

