நேபாளத்தில் ஓரிரு நாளில் மீண்டும் மற்றொரு பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள சீனா, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. இதனிடையே, நேபாள பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது; தமிழர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் நிலை இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26இல், அண்டை நாடான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், போதிகோஷி நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. திடீரென சுனாமி போல் கொந்தளித்து வந்த ஆற்று வெள்ளம், வழியோர கிராமங்களை வாரிச்சுருட்டியது.
பல கிராமங்களில் பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் முழுமையாக அழிந்துள்ளன. ரசுவா, அதைச் சுற்றியுள்ள நவாபூர், தாடிங், சித்வான், தனாஹன், கோர்க்கா, நவலபராசி கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

எதிர்பாராத இந்த கோர விபத்தில் சிக்கி, இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுதவிர, தமிழர்கள் 80 பேர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை.
நேபாள- சீனா எல்லையில் லாங்டாங் லிருங்கின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய பனி மற்றும் பாறைச் சரிவு, லெண்டே நதியைத் தடுத்ததே பெருவெள்ளத்துக்கு காரணம் என்று செயற்கைக்கோள் பட ஆய்வுகளை ஆதாரமாகக் காட்டி காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஓரிரு நாளில் நேபாளத்துக்கு மற்றொரு பேராபத்து காத்திருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, திபெத்தில் உள்ள சோட்சென் நதி மற்றும் புருபே சங்போ நதி கலக்கும் இடம் அருகே, தற்போது புதியதாக பெரிய பனிநீர் ஏரி உருவாகி இருப்பதாகத் தெரிவித்துள்ள சீனா, அதன் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று எச்சரித்துள்ளது.
எனவே, கடந்த 25ஆம் தேதி ஏற்பட்டது போன்ற மற்றொரு ஆற்றின் சீற்றத்தை நேபாளம் எதிர்கொள்ள நேரிடும் என்ற தகவல், அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதனிடையே, மீட்பு, நிவாரணப் பணிகளில் நேபாள வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

