சேகர்பாபு மீது எனக்கு கோபம் இல்லை; எனக்கு வருத்தம்தான் உள்ளது என்று சென்னையில் நடத்த திமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி, திமுக சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது, திமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
எந்த சூழலிலும் மக்களோடு மக்களாக நிற்கக்கூடியது திமுக. அப்படித்தான் கலைஞர், ஸ்டாலின் கற்றுத் தந்தனர். சட்டசபைத் தேர்தலில் திராவிடம் 2.1 மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், எதிரி யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் களமிறங்கியதால் பின்னடைவைச் சந்தித்தோம். அந்தத் தவறை இனி செய்யப் போவதில்லை.
தேர்தல் தோல்விக்கு சினிமா மாயை, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் திமுக அரசின் சாதனைகள் இளம் தலைமுறையினரிடம் முழுமையாக கொண்டு சேர்க்காதது போன்றவையே காரணம். இதையே பாடமாக ஏற்று, வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியாக மாற்றிட வேண்டும்.
சென்னையில், திமுக தோல்வியால் சேகர் பாபுவின் மீது எனக்குக் கோபம் இருப்பதாக அவர் நினைக்கலாம். அது கோபம் அல்ல, வருத்தம். இது, அவர் மீதும் எனக்குள்ள உரிமையாகும்.
தற்போதைய ஆட்சியாளர்கள், தாங்கள் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் பதவியேற்றாலும், தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை தேர்தலுக்கு முன்பு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
ஏதோ ஒரு மிகப்பெரிய விபத்து போலத்தான் இந்தத் தேர்தல் முடிந்துள்ளது. மேலும், மக்கள் அவர்களுக்கு முழுமையான பெரும்பான்மையை வழங்கவில்லை. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அவர்கள் வென்றது வெறும் 108 இடங்கள் மட்டுமே. திமுகவினரின் உழைப்பால் வெற்றி பெற்றவர்களின் தயவில்தான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் தைரியமாகச் சொல்லலாம்.
இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சில கோப்புகள் தன் மேஜையில் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மிரட்டுகிறார். தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளையும் உடனடியாகத் திறந்து வெளியிடட்டும். இதற்கெல்லாம் திமுக பயப்படாது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

