தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இது குறைவு என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கொசுக்கள் பெருகி வருகின்றன. ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் முட்டையிட்டு அதன் பெருக்கம் அபரிமிதமாக உள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர்கள், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர், அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கி இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெங்கு வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்தோம்.
மழைநீர் போன்ற சுத்தமான நீரில் தான் டெங்கு கொசு புழு உருவாகும். எனவே வீடுகளில், பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாத்திரம், டயர் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். இரவில் கடிக்கும் கொசுவால் டெங்கு வராது, பகலில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுவால் தான் டெங்கு பாதிப்பு வரும்.
அதே நேரம் டெங்கு பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடந்த ஆண்டில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை 25,521 டெங்கு பேருக்கு பாதிப்பு இருந்தது. இந்த ஆண்டு 12,543 பேர் என டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை டெங்குவால் 12 இறப்புகள் பதிவாகின.
இது நடப்பாண்டில் 4 ஆகக் குறைந்துள்ளது. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. நிலைமையை சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

