மணப்பாறை, மே 27:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண் மற்றும் பெண் பூதங்களுக்கு வினோத முறையில் திருமணம் செய்து வைத்து, இளைஞர்கள் பல்வேறு வேடமணிந்து கொண்டாடிய படுகளத் திருவிழா பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.
மணப்பாறையை அடுத்த பெரியமணப்பட்டியில் பழமை வாய்ந்த ‘தானா முளைத்த மாரியம்மன்’ கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒன்பது கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் வருடாந்திர திருவிழா கடந்த வாரம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பூதங்களுக்குத் திருமணம்
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ‘படுகளம் திருவிழா’ இன்று மாலை நடைபெற்றது. இதற்காகச் சின்னமணப்பட்டியில் மூங்கில் குச்சிகளைக் கொண்டு, பிரம்மாண்ட அளவிலான ஆண் மற்றும் பெண் பூதங்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. தொடர்ந்து, அந்த இரு பூதங்களுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
2 கி.மீ தூரம் தூக்கிச் சென்ற மக்கள்
திருமண சடங்குகள் முடிந்தவுடன், அங்கிருந்து காட்டுப்பகுதி வழியாக தாரை தப்பட்டை மற்றும் மேள தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் கிராம மக்கள் பூதங்களின் உருவங்களை சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள மணப்பட்டிக்குத் தங்களது தோள்களில் தூக்கிச் சென்றனர்.
காந்தாரா, காளி வேடமிட்ட இளைஞர்கள்
படுகள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் மற்றும் கரடி உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்களை அணிந்து வந்து, தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கிராம வீதிகளில் அவர்கள் ஆடிய ஆட்டம் திருவிழாவை மேலும் அமர்க்களப்படுத்தியது.
படுகளம் நிறைவு & அபிஷேகம்
நிறைவாக, மணப்பட்டி தானா முளைத்த மாரியம்மன் கோவில் முன்பு திரண்ட பூதங்கள் மற்றும் வேடமணிந்த இளைஞர்கள், முன்னும் பின்னுமாக ஓடி விளையாடி படுகள வழிபாட்டை முறைப்படி நிறைவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
கிராமியக் கலைகளுடனும், பாரம்பரிய வழிபாட்டுடனும் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

