தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு பருவமழை பொய்த்து, தற்போது வரை பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரம், அவ்வப்போது சில மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட ஒருசில வட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று, 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இடி, மின்னல் உடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தை அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், கீழ்மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாகவே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான காரணம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

