மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்ட மலம்பட்டி பகுதியில் உள்ள கரும்பாறைகளில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவன (GSI) அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் இந்த ஆய்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இது டங்ஸ்டன் கனிமம் தொடர்பான ஆய்வா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆய்வுக்குழுவினரிடம் பொதுமக்கள் கேட்டபோது, கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, திருப்பத்தூர், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமத் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மலம்பட்டி பகுதியில் தற்போது நடைபெறும் ஆய்வு மீண்டும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வு எந்த கனிமத்தை கண்டறிவதற்காக நடைபெறுகிறது?
டங்ஸ்டன் கனிம ஆய்வா?
எந்த அரசின் அனுமதியுடன் இந்த ஆய்வு நடக்கிறது?
எந்தெந்த பகுதிகளில் ஆய்வு நடைபெறுகிறது?
பாறைகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகிறதா?
என்பது குறித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அறிய விரும்பும் தகவல்கள்:
* ஆய்வு நடத்தும் அமைப்பின் முழு விவரம் என்ன?
* ஆய்வுக்கான அனுமதி எந்த ஆவணத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது?
* ஆய்வின் நோக்கம் என்ன?
* எந்த கிராமங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன?
* ஆய்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?
* எதிர்காலத்தில் சுரங்கம் அமைக்கும் திட்டம் உள்ளதா?
மக்களின் நிலம், நீர், மலை மற்றும் இயற்கை வளங்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அது குறித்து மக்களுக்கு முன்கூட்டியே வெளிப்படையான தகவல் வழங்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு மற்றும் இயற்கை வள பாதுகாப்பு மக்கள் கூட்டமைப்பு கம்பூர் செல்வராஜ் என்பவர் தனது சமூக வலைதளங்களின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்

