குடும்ப ஏற்பாடுகள் தொடர்பான குறிப்பிட்ட 4 வகையான ஆவணங்களை காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, தமிழ்நாட்டில் நவம்பர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பதிவுத் துறையின் நவீனமயமாக்கல் திட்டமான Project STAR 3.-ன் கீழ் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிர்வாக அனுமதியை வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறைச் செயலாளர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள G.O.(Ms) No.149, நாள் 07.10.2026 மூலம் வழங்கியுள்ளார்.

இதன்படி, Settlement Deed, Release Deed, Partition Deed மற்றும் Settlement Deed Revocation ஆகிய 4 வகையான ஆவணங்கள் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
ஆவணங்களை இணையவழியில் தயாரித்து, தேவையான சான்றாவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, கைரேகை அல்லது பயோமெட்ரிக் மற்றும் ஆதார் அங்கீகாரம் மூலம் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.

பதிவு நிறைவடைந்ததும் ஆவணம் டிஜிட்டல் முறையில் செயலாக்கப்பட்டு, குடிமக்களின் Citizen Login-க்கு அனுப்பப்படும். மேலும், STAR அமைப்பிலும் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல், பதிவு நடைமுறையை விரைவுபடுத்துதல், ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படுவதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.


