பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே அலுவலகம் அல்லது ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வுகளை EMIS இணையதளம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை செப்.25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், EMIS-ல் பதிவேற்றப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், அலுவலகங்களில் நேரடியாக பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக சில பதிவுகள் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, `PA to CEO`, `PA to DEO` உள்ளிட்ட பதவிகளுக்கு தனித்தனி பணியமைப்பு உள்ள நிலையில், சில மாவட்டங்களில் `PA to DEO` பணியிடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 5, 6, 7 என அதிகமான பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் மட்டுமே EMIS தளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விடுபட்டுள்ள மற்றும் திருத்தம் செய்ய வேண்டிய பணியாளர்களின் விவரங்களை அக்.1-ஆம் தேதிக்குள் முழுமையாகப் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவேற்றப் பணிகள் முடிந்த பின்னர், ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், நிரப்பப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள் மற்றும் EMIS-ல் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய அறிக்கையை உரிய படிவத்தில் தயாரித்து, முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளதால், இப்பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி உரிய காலக்கெடுவுக்குள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

