திருவண்ணாமலையில் திமுக மாநாட்டுக்காக அரசு ஏரியிலிருந்து அனுமதியின்றி மண் மற்றும் கிராவல் அள்ளியதாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (V&AC) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப் பிரிவில் Crime No.08/2026 என்ற எண்ணில் செப்டம்பர் 24-ஆம் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் கடந்த 2025 டிசம்பர் 14-ஆம் தேதி திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட திடலை சமன்படுத்துவதற்கு, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து அனுமதியின்றி மண் மற்றும் கிராவல் தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
சென்னை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி. ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், சுமார் 70.65 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலப்பம்பாடி ஏரியின் சுமார் 12 ஏக்கர் பகுதியில் 10 முதல் 23 அடி ஆழம் வரை மண் தோண்டப்பட்டதாகவும், மொத்தம் சுமார் 45,72,058 கன அடி மண் மற்றும் கிராவல் எடுக்கப்பட்டதாகவும் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அரசுக்கு ரூ.8.22 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன் விவசாயப் பயன்பாட்டுக்காக சு.பள்ளியம்பட்டு ஏரியில் இருந்து களிமண் எடுக்க அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் கள ஆய்வின்போது அந்த ஏரியில் மண் எடுக்கப்படாமல், மாநாட்டுத் திடலுக்கு அருகேயுள்ள மலப்பம்பாடி ஏரியில் மண் அள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக மண் தோண்டப்படுவதாக புகார்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் அளிக்கப்பட்டிருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எ.வ.வேலு, எ.வ.குமரன் உள்ளிட்டோர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், அரசு சொத்து தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பிரிவுகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(2) உடன் 13(1)(a), பிரிவு 12 ஆகியவையும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் திருவண்ணாமலை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மண் தோண்டுதல் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள், அரசு அதிகாரிகளின் பங்களிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

