தமிழகத்தில் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 17,348 டெங்கு பாதிப்புகளும், 4,653 உண்ணி காய்ச்சல் பாதிப்புகளும் இருப்பதாகக் குறிப்பிடப்படும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசால் வெளிப்படையாக வெளியிடப்பட்டவையே. முந்தைய ஆட்சிக் காலத்தில் டெங்கு பாதிப்பு “மர்ம காய்ச்சல்” என மறைக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2017-ஆம் ஆண்டில் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 65 பேர் உயிரிழந்ததாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையப் புள்ளிவிவரங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 131 பரிசோதனை மையங்களில் 2.23 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு விகிதம் 0.05 சதவீதமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது செப்.18-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும், உண்ணி காய்ச்சலுக்கான சிகிச்சை டெங்கு சிகிச்சையிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். ஆய்வக அறிக்கையை அரசியல் அறிக்கையால் மாற்ற முடியாது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி ஆக.4-ஆம் தேதி மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆக.20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 26,303 பணியாளர்கள் மூலம் 58.5 லட்சம் வீடுகளில் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5,677 புகை மருந்து இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 17,187 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் தனி காய்ச்சல் வார்டுகள், போதிய மருந்துகள் மற்றும் தட்டணு கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாத்திரங்களில் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை ‘உலர் நாள்’ கடைப்பிடித்து கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்ற வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். உதவிக்கு 104 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
மக்கள் ஆணையுடன் அமைந்த அரசை “டம்மி” என விமர்சிப்பது மக்களையே அவமதிப்பதாகும். உண்மைக்குப் புறம்பான அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

