மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., வியாழக்கிழமை (செப். 24) நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட 50-ஆவது வார்டு, சிம்மக்கல் LNP அக்ரஹாரம் தெருவில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வீடு வீடாகச் சென்ற அவர், டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ள இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், கொசு உற்பத்தியாகும் வகையில் தேவையற்ற பொருள்கள் தேங்கிக் கிடக்காமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார், இ.ஆ.ப., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

