பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026–27-ஆம் நிதியாண்டுக்கான முதற்கட்ட வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.60.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் 2 சிறப்பு கவுன்சிலர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.

வார்டு மேம்பாட்டு நிதி கடந்த சில மாதங்களாக விடுவிக்கப்படாததால், சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டதாக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளத் தடுப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், மழைநீர் வடிகால்களைப் பராமரித்தல், நீர் தேங்கும் பகுதிகளில் பம்புகள் மற்றும் ஹியூம் குழாய்கள் அமைத்தல், சில்‌ட் கேட்ச் பிட்கள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கும் நிதியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான பரிந்துரைகளை கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடம் அளிக்கலாம். ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உள்பட்டு மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version