சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 சவரன் எடையுள்ள தங்கக் கிரீடத்தைக் காணவில்லை என்றும், அதற்குப் பதிலாக போலி கிரீடம் வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையிலான குழுவினர் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்புமிக்க பொருள்களின் இருப்பைச் சரிபார்த்து வருகின்றனர். அப்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கிய இந்தத் தங்கக் கிரீடத்தின் எடை 55.72 சவரன் (சுமார் 445.78 கிராம்) எனப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு அப்போது சுமார் ரூ.70 லட்சம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது பாதுகாப்பு அறையில் அதே வடிவத்தில் போலியான கிரீடம் இருந்ததாகவும், அதன் எடை சுமார் 240 கிராம் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரீடம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தக் கிரீடம் ஆரன்முளையில் உள்ள தேவஸ்வம் வாரிய பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டதாக பதிவுகள் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஆரன்முளை தேவஸ்வம் வாரிய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க மாலையும் காணவில்லை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சபரிமலை தங்கம் தொடர்பான முறைகேடு குறித்து ஏற்கெனவே சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது தங்கக் கிரீடம் தொடர்பான விவகாரம் வெளியாகியுள்ளது.
எனினும், தங்கக் கிரீடம் காணாமல் போகவில்லை என திருவாபரண ஆணையர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள விரிவான ஆய்வு அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவிலேயே தங்கக் கிரீடம் தொடர்பான முழுமையான உண்மை நிலை உறுதி செய்யப்படும்.


