தமிழக வனத்துறையின் புகழ்பெற்ற கும்கி யானையான ‘கலீம்’, 60 வயதை எட்டிய நிலையில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனத்துறை சார்பில் ‘கார்டு ஆப் ஹானர்’ மரியாதையுடன் கலீம் வழியனுப்பி வைக்கப்பட்டது.
1972-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிடிபட்ட கலீம், சிறப்புப் பயிற்சியின் மூலம் திறமையான கும்கி யானையாக உருவானது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மனித-வனவிலங்கு மோதல்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.
‘அரிசி ராஜா’, ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட ஆபத்தான காட்டு யானைகளை கட்டுப்படுத்திய கலீம், தனது வாழ்நாளில் 99 வெற்றிகரமான ஆபரேஷன்களை நிறைவு செய்துள்ளது. 100-வது ஆபரேஷனாக ஈரோடு தாளவாடி பகுதியில் ‘கறுப்பன்’ யானையைப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அந்த யானை காட்டுக்குள் சென்றதால் அந்த சாதனை வாய்ப்பு தவறியது.
கலீமின் வெற்றிகளுக்குப் பின்னால் அதன் பாகன் மணி மற்றும் உதவிப் பாகன்களின் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாக இருந்தது. கட்டளைகளை புரிந்து செயல்படும் திறன், மற்ற யானைகளை வழிநடத்தும் ஆற்றல் ஆகியவற்றால் கலீம் வனத்துறையினரின் பாராட்டைப் பெற்றது.
ஓய்வு பெற்றுள்ள கலீம், இனி டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமிலேயே அரசு பராமரிப்பில் தனது ஓய்வு காலத்தை கழிக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

