தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தது முதல், அது தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த சூழலில், உண்மையில் எத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கு கார் உள்ளது, யாருக்கெல்லாம் இல்லை என்ற சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தங்களது வேட்புமனுவில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் வெளியியாகி உள்ள புள்ளி விவரங்களின்படி, தற்போது உள்ள 226 சட்டமன்ற உறுப்பினர்களில் 43 பேரிடம் சொந்தமாக ஒரே ஒரு கார் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது. கட்சி ரீதியாக எடுத்துக் கொண்டால், தவெக எம்.எல்.ஏ.க்கள் 107 பேரில், 81 பேரிடம் கார் உள்ளது; 26 பேருக்கு சொந்தமாக கார் இல்லை.
எதிர்க்கட்சியான திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு கார் இல்லை. அதிமுகவின் 41 உறுப்பினர்களில் 36 பேருக்கு சொந்தமாக கார் உள்ளது; 5 பேருக்கு இல்லை என்று வேட்புமனு விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சிறிய கட்சிகளை எடுத்துக் கொண்டால், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்களில் தலா ஒரு உறுப்பினரிடமும், பாமகவின் 4 உறுப்பினர்களில் ஒருவர் தனக்கு சொந்தமாக கார் இல்லை என வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர்.
இன்னொரு ஆச்சரியமான தகவலும் உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டவர்களும், தங்களுக்கென சொந்தமாக கார் இல்லை என்றே தெரிவித்துள்ளதை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
சொந்தக் கார் இல்லாத தமிழக எம்.எல்.ஏ-க்கள் ஒருபுறமிருக்க, கார் வைத்துள்ள எம்.எல்.ஏ.க்களிடம் ஒன்று, இரண்டு கார் என மொத்தம், 396 கார்களை வைத்துள்ளனராம். அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸிடம் 9 கார்கள், தவெக எம்.எல்.ஏக்கள் பிரபு மற்றும் கனிமொழி சந்தோஷிடம் தலா 7 கார்கள் உள்ளன. எம்.எல்.ஏ.க்களிடம் உள்ள கார்களின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பு மட்டும் தோராயமாக ரூ.89 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

