ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஊராட்சிகளில் உள்ள 37 நிலத்தடி நீர் ஆதாரங்கள் குடிப்பதற்கு தகுதியற்றவை என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஈங்கூர், வரப்பாளையம், வாய்ப்பாடி, முகாசிபிடாரியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கைபம்புகள் மற்றும் கிணறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.

இதில், நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்கள் (TDS), நைட்ரேட் அளவு, கடினத்தன்மை உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நீர் ஆதாரங்களை குடிநீராக பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

12 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீர் பாதிப்பு?

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

சிப்காட் பகுதியில் பூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்ற (ZLD) முறையுடன் கூடிய பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (CETP) பணிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வராததும், கண்காணிப்பு குறைபாடுகளும் நீர் மாசுபாட்டிற்கு காரணமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை பலகைகள் அமைப்பு

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 37 நீர் ஆதாரங்களிலும் “குடிக்கத் தகுதியற்ற நீர்” என சிவப்பு நிற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள மின்மோட்டார்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் விநியோக நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இந்த நீர் ஆதாரங்களின் தண்ணீரை குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version