பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாகவும், இது வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மிக அதிவேகமாகத் தீவிரமடையக் கூடும் என்றும் ஐநா-வின் ‘உலக வானிலை அமைப்பு’ எச்சரித்துள்ளது.

இதனால் உலகெங்கும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் அதீத மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 2*C க்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ தீவிரமடைவதால் நிலப்பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும். சில நாடுகளில் கடும் வறட்சியும், சில பகுதிகளில் பெருமழையும் வெள்ள அபாயமும் ஏற்படும்.

இந்தியாவில் எல் நினோ தாக்கம்: இந்த எல் நினோ தாக்கத்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பருவமழை குறைந்து, வறட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “எல் நினோ ஏற்கனவே தொடங்கிவிட்டது, இது உலகளாவிய வெப்பநிலையை மேலும் உயர்த்தும். நாடுகள் தங்களின் விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறைகளை இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும்” என உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் செலஸ்டி சௌலோ தெரிவித்துள்ளார்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version