சட்டமன்றத்தில், உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில், திங்களன்று 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதன்முடிவில், உயர் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரமாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில், சுமார் 6 ஆயிரம் பேராசிரியர்கள் 3 கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.
நடப்பு கல்வியாண்டு முதல், மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பயில்வதற்காக ரூ. 20 லட்சம் வரையிலான பிணையில்லாத கல்விக்கடன் வழங்கப்படும். செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்துக்காக பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ. 5 லட்சம் மொத்தம் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி, வாழ்வாதாரம், மருத்துவ செலவுக்காக உயர்கல்வியில் சேரும் 50 திருநர் மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதற்காக, ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.

