22,877 டாஸ்மாக் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பலன் – அக்டோபர் 15-க்குள் விவரங்களைப் பதிவேற்ற உத்தரவு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கீழ் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கார்ப்பரேட் சம்பளத் தொகுப்புத் திட்டத்தை (CSP) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற டாஸ்மாக் இயக்குநர் வாரியக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு வைத்துள்ள மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 22,877 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், ஒப்பந்தப் பணியாளர்களுக்கான சம்பளப் பிரிவைப் பொறுத்து விபத்து மரணக் காப்பீடு வழங்கப்பட உள்ளது.
* காண்ட்ராக்சுவல் கோல்டு: ரூ.50 லட்சம் வரை விபத்து மரணக் காப்பீடு.
* காண்ட்ராக்சுவல் சில்வர்: ரூ.30 லட்சம் வரை விபத்து மரணக் காப்பீடு.
மேலும், நிரந்தர முழு மற்றும் பகுதி ஊனத்திற்கான காப்பீடு, கூடுதல் காப்பீட்டுப் பாதுகாப்புகள் மற்றும் தகுதிக்குட்பட்ட டெபிட் கார்டு விபத்துக் காப்பீட்டு பலன்களும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மேற்பார்வையாளர்களுக்கு மாத நிகரச் சம்பளமாக ரூ.28,750, விற்பனையாளர்களுக்கு ரூ.26,340 வழங்கப்படுவதாகவும், இவ்விரு பிரிவினரும் கோல்டு திட்டத்தில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.24,928 மாத நிகரச் சம்பளத்துடன் சில்வர் திட்டம் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கும் எஸ்பிஐ வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்கள் மாவட்டங்களில் பணியாற்றும் கடைப் பணியாளர்களின் விவரங்களை [www.tasmace2e.in](http://www.tasmace2e.in) இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பணியாளர்களின் பெயர், சம்பளக் கணக்கு எண், பதவி உள்ளிட்ட விவரங்கள் வங்கிப் பதிவேடுகளுடன் சரியாகப் பொருந்துவதை உறுதிசெய்து, அக்டோபர் 15, 2026-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.


