மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, வேலூர் மாவட்ட தொமுச பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட கவுன்சில் தலைவர் சே.மணி தலைமை வகித்தார். தொமுச பேரவை செயலாளர் என்.தனசேகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தார்.

மாவட்ட கவுன்சில் செயலாளர் வெ.கலைநேசன், அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டல பொதுச் செயலாளர் வி.சுப்பிரமணி, தலைவர் ஜெ.கோகுல கிருஷ்ணன், சென்னை மண்டல தொமுச பொதுச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். தேசிய பணமாக்கல் கொள்கை 2.0 மூலம் பொது சொத்துகளை குத்தகைக்கு விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மின்சார சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழகத்தில் எண்ணூர், தூத்துக்குடி அனல் மின் நிலைய விரிவாக்கங்களை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மூலம் மின்வாரியத்தை தனியார்மயமாக்கக் கூடாது. போக்குவரத்துத் துறையில் 1,000 மின்சாரப் பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.மாவட்ட துணைத் தலைவர் வி.ஏ.சலாம் வரவேற்றார். பொருளாளர் பூ.விஜயகுமார் நன்றி கூறினார்.