வல்லம்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடைபெறும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க, வல்லம் இணைப்புச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.என். துரை, மாவட்டச் செயலாளர் தியாக. சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் ரேவதி, எம்.பி. முரசொலி, எம்.எல்.ஏ. விஜய்சரவணன் உள்ளிட்டோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர்–திருச்சி இடையேயான முக்கிய வழித்தடமாக வல்லம் உள்ளது. முதலைமுத்துவாரி பாலம் மற்றும் வல்லம் பிரிவு சாலைப் பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தபோதிலும், வல்லம் இணைப்புச் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால் விபத்து அபாயம் தொடர்கிறது. செங்கிப்பட்டி, பூதலூர் பிரிவு சாலைகளில் மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வல்லம் பகுதியில் மட்டும் மேம்பாலம் அமைக்கப்படவில்லை.

இந்தச் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டு வாகனங்கள் சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், நாட்டாணி, வல்லம்புதூர், மொண்ணையம்பட்டி, குருவாடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், அருகிலுள்ள கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் இந்தச் சாலையை கடந்து செல்கின்றனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, வல்லம்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version