இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ஆம் தேதி மாபெரும் நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு திண்டுக்கல்லில் உள்ள தி ரேட்னேஜ் கன்வென்ஷன் அண்ட் ரிசார்ட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அருண் ஈவென்ட்ஸ் மற்றும் மெர்குரி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட உள்ளன. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கான விளம்பரதாரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார், ஸ்ரீ வாசவி தங்கமாளிகை நிர்வாக இயக்குநர் மேடா என். ரவி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

“இளையராஜாவின் இசைப் பயணத்தில் பங்கேற்பது பெருமை”

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் கூறியதாவது:

“தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை திண்டுக்கல்லில் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் அவரது இசைப் பயணத்தில் நாமும் ஒரு பகுதியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்றார்.

பிரம்மாண்ட மேடை அமைப்பு

அருண் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அருண் கூறுகையில், “இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது” என்றார்.

‘ஜெயிலர்’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைத்த கலை இயக்குநர் கிரண், இந்த இசை நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.

டிக்கெட் விற்பனை தொடக்கம்

நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை மில்கி மிஸ்ட் நிறுவனத் தலைவர் சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.

நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் இந்த மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை entrypasses.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version