திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 14-வது வார்டுக்குள்பட்ட மாரியம்மன் கோயில் அருகே, அடுத்தடுத்த வார்டுகளில் இருந்தும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும், ஹோட்டல் கழிவுகளும் சேர்ந்து குப்பை மலைபோல் குவிந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி, அப்பகுதி குடியிருப்புவாசிகளும் குப்பைத் தொல்லையால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்கிடையே, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியை குடோனில் மேற்கொள்ளாமல், சாலையிலேயே குப்பைகளை கொட்டி பிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட குப்பைகள் மூட்டைகளில் கட்டப்பட்டு சாலையோரத்திலேயே நீண்டநாள்களாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குப்பைகளை கையாளும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குப்பைகளை கிளறி தரம் பிரிப்பதால், சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சாலையின் ஒரு பகுதி குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு முறையாக அனுப்பாமல் சாலையோரத்திலேயே வைத்திருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மக்களின் நலனுக்காக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14-வது வார்டு கவுன்சிலர், இந்தப் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை என்றும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல், குப்பை மேலாண்மையிலும் மாற்றம் எப்போது வரும்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குப்பைகளை முறையாக சேகரித்து, குடோனில் பாதுகாப்பான முறையில் தரம் பிரித்து, உடனடியாக மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு அனுப்ப மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version