தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டு, இனி உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பான கோப்புகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் காலியாகும் பணியிடங்களை விரைவாகவும், வெளிப்படையாகவும் நிரப்பும் வகையில் Promotion Panel Guidelines எனப்படும் பதவி உயர்வு தகுதிப் பட்டியல் தயாரிப்புக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு பதவிக்கும் தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்க குறிப்பிட்ட ஆண்டின் “அறுதி நாள்” (Crucial Date) அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் அதிகாரிகளின் முந்தைய 5 ஆண்டுகால பணிப்பதிவுகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தண்டனை விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும்.
மேலும், விதி 17(b)-ன் கீழ் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது தற்காலிக பணிநீக்கத்தில் (Suspension) இருந்தாலோ, அவர்களின் பெயர் தகுதிப் பட்டியலில் சேர்ப்பது தள்ளி வைக்கப்படும்.
அதே நேரத்தில், ஆரம்பக்கட்ட விசாரணைகள் (Preliminary Inquiry) அல்லது சிறிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பது மட்டும் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தடையாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் போது அதிகாரிகளின் தகுதி (Merit), பணி மூப்பு (Seniority) மற்றும் இடஒதுக்கீட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதவி உயர்வை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துறப்பு செய்தவர்கள், பதவி விலகியவர்கள் தொடர்பான விவரங்களை உரிய ஆவணங்களுடன் தனியாக பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் ஏற்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அதற்கான மதிப்பீடுகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தகுதியான அதிகாரிகள் ஓய்வு பெறுவதற்கு முன்பே அவர்களுக்கு உரிய பதவி உயர்வு ஆணைகள் கிடைப்பதை துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதவி உயர்வு கோப்புகள் சம்பந்தப்பட்ட துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை பரிசீலனைக்குப் பிறகு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இனி வரும் காலங்களில் உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பான அனைத்து முக்கிய கோப்புகளும் தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


