சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே, முன்னாள் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளரும், தற்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான பச்சேரி சுந்தரராஜன் ஏற்பாட்டில் சுமார் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயற்கை வளங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:
“சிவகங்கை மாவட்டத்தை திமுக, அதிமுக கோட்டை என்று கூறியவர்கள், தேர்தல் பிரசாரத்தின்போது யூ-டர்ன் போட்டு ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நான்கு தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக மாற்றியவர் தளபதி விஜய்” என்றார்.
மேலும், “கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் கனிமவள முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 30 நாள்களுக்குள் 67 கல் குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டது. மேலும் 180 கல் குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையிலும் முதல்வர் விஜய் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்” என்றார்.
கட்சியின் வளர்ச்சி குறித்து பேசிய அமைச்சர், “கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்துவிட்டார் என்று சிலர் விமர்சிக்கின்றனர். அது உண்மையல்ல.
மூங்கில் மரம் முதலில் பல ஆண்டுகள் மண்ணுக்குள் வேர்களைப் பரப்பி, பின்னர் மிக வேகமாக வளர்வதைப் போல, தளபதி விஜய் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றங்கள் மூலம் அடித்தளத்தை உருவாக்கியதன் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது” என்று ‘மூங்கில் மரக் கதை’ மூலம் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.