தமிழகத்தில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் காலியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பதுடன், நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட 5 பணியிடங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில், பணியிடங்கள் ஓய்வு காரணமாக காலியாகியுள்ளதாகவும், புதிய நியமனங்களை மேற்கொள்ள தேர்வுக் குழு அமைக்கப்பட்டு நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. நியமன செயல்முறையை நிறைவு செய்ய 3 மாதங்கள் அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தகவல் ஆணையங்கள் செயல்படாமல் இருப்பது தகவல் அறியும் உரிமையை பாதிப்பதாகக் குறிப்பிட்டது. எனவே, 3 மாத அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமனத்தை நிறைவு செய்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பின்னர் நடைபெற உள்ளது.


