மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
முகாமுக்கு ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் மேலாண்மை இயக்குநர் வீரலட்சுமி தலைமை வகித்தார். நிறுவனத்தின் நிறுவனர் விஜயன் முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் பங்கேற்று, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
20 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு
கண் பரிசோதனையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 10 பேர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனையின்படி அறுவை சிகிச்சை, விழி லென்ஸ், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு கண் சொட்டு மருந்து மற்றும் கருப்பு கண்ணாடி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


