தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைக்கிராம மக்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரை ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்கு உட்பட்ட வருசநாடு, மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலைக்கிராம மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வருசநாடு மற்றும் மேகமலை மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக அப்பகுதியையே வாழ்விடமாகக் கொண்டுள்ளனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதொழில்கள் மற்றும் வனத்தைச் சார்ந்த தொழில்களே அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, குழந்தைகளின் கல்வி மற்றும் முதியோரின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை
எனவே, மலைக்கிராம மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து, தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது சட்டப்பேரவை உறுப்பினரின் நேர்முக உதவியாளர்கள் ராஜா அழகணன், ஹசீப், முத்து, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


