தமிழக நெசவாளர்களிடமிருந்தே இலவச வேட்டி, சேலைகள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படும்: வேலூர் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ம.விஜய் பாலாஜி அதிரடி அறிவிப்பு!

வேலூர், ஜூன் 13:

   தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி தலைமையில், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக நெசவாளர்களுக்கு முன்னுரிமை & கூலிப் பிரச்சினைக்குத் தீர்வு

கடந்த ஆட்சிக் காலத்தில் இலவச வேட்டி, சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனிவரும் காலங்களில் அவை தமிழகத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடம் மட்டுமே முழுமையாகக் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் விடுபட்ட தகுதியான நபர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகக் கூறினார்.

கூட்டுறவு சொசைட்டிகளில் கூலி பிடித்தம் செய்யப்படுவதைக் காரணம் காட்டி, தனியார் நிறுவனங்களும் நெசவாளர்களின் கூலியைக் குறைப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காகத் துறை அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கோ ஆப்டெக்ஸ் மேம்பாடு மற்றும் நூல் விலை குறைப்பு

பண்டிகை காலங்களில் தனியார் துணிக்கடைகளுக்கு இணையாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திலும் விற்பனையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பின்னலாடை உற்பத்தியைப் பாதிப்பில் இருந்து மீட்க 11 சதவீத ஜிஎஸ்டி வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் நூல் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் அரசு சார்பிலேயே நேரடியாகப் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு நூல் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார்.

வேலூர் மாவட்ட உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசிய அமைச்சர்:

* பல ஆண்டுகளாக இழுபறியாக நீடித்து வரும் பாதாள சாக்கடைப் பணிகள் அனைத்தும் வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்கப்படும்.

* போக்குவரத்து மற்றும் பாலாறு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் அனைத்துத் துறைகளும் இணைந்து செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலை வேலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மகிமண்டலம் பகுதியில் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

“இது மக்களுக்கான அரசு, மக்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். எனவே, மேல் அரசம்பட்டு அணைப் பணி உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் சரி செய்யப்படும். பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மாதத்திற்கு ஒருமுறை நான் நேரில் வந்து ஆய்வு செய்வேன்,” என்று அமைச்சர் ம.விஜய் பாலாஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.வினோத்கண்ணன் (வேலூர்), எம்.சுதாகர் (காட்பாடி), த.வேலழகன் (அணைக்கட்டு), தென்றல்குமார் (கே.வி.குப்பம்), சிந்து (குடியாத்தம்) மற்றும் அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version