திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் பெருகிவரும் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல் பின்னணியுடன் நடக்கும் சட்டவிரோத பண வசூலைத் தடுத்து, ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

*அரசியல் செல்வாக்கும் சட்டவிரோத வசூலும்:
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் கடந்த அதிமுக மற்றும் தற்போதைய திமுக ஆட்சி காலங்களில், சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றாமல் இருப்பதற்காக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சில அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள், ஏழை வியாபாரிகளிடம் தினசரி மற்றும் மாத வாரியாக சட்டவிரோதமாகப் பெரும் தொகையை வாடகையாக வசூலித்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், தங்களது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறையிடம் தற்காலிக அனுமதி பெறும் சிலர், தாங்கள் நேரடியாக வியாபாரம் செய்யாமல், பிறருக்கு அதனை உள்வாடகைக்கு (Sub-letting) விட்டு முறைகேடாகச் சம்பாதித்து வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

*ஸ்தம்பிக்கும் முக்கியச் சாலைகள்:*
திண்டுக்கல் பேருந்து நிலையம் (பஸ் ஸ்டாண்ட்), காட் ஆஸ்பத்திரி சந்திப்பு, பழனி பைபாஸ், வத்தலகுண்டு பைபாஸ், திருச்சி பைபாஸ் மற்றும் நகரின் முக்கிய உட்புறச் சாலைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் தற்காலிகக் கடைகள் என்ற பெயரில், பலர் நிரந்தரக் கடைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதிகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

*முன்வைக்கப்படும் முக்கியக் கோரிக்கைகள்:*

* *சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு: அன்றாடப் பிழைப்பிற்காகச் சாலையோரம் சிறு வியாபாரத்தில் ஈடுபடும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாற்று இடங்களையோ அல்லது தற்காலிகமாக முறைப்படுத்தப்பட்ட பிரத்யேக மண்டலங்களையோ (Vending Zones) ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* *மாநகராட்சியே நேரடியாக முறைப்படுத்த வேண்டும்* புரோக்கர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போன்ற இடைத்தரகர்கள் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். மாநகராட்சியே நேரடியாக நியாயமான தற்காலிக வாடகையை நிர்ணயம் செய்து முறைப்படுத்தினால், இடைத்தரகர்களின் கொட்டம் ஒடுக்கப்படுவதோடு அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

* *அனுமதி ரத்து நடவடிக்கை:* அரசியல் செல்வாக்கை வைத்து அனுமதி பெற்று, அதனை மற்றவர்களுக்கு உள்வாடகைக்கு விட்டு முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அத்தகைய நபர்களின் தற்காலிக உரிமத்தை எவ்விதப் பரிந்துரையுமின்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

*அதிகாரிகளின் கவனத்திற்கு…*
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் சமரசம் செய்யாமல், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திண்டுக்கல் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version