தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காகப் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.
பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான பள்ளிப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் பள்ளிப் பைகள் மற்றும் மதிய உணவுப் பைகள் சீருடைகள், காலணிகள் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்காகக் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர்.

பொதுமக்களின் வருகை திடீரென அதிகரித்ததால், குன்னூர் மார்க்கெட்டில் உள்ள புத்தகக் கடைகள், துணிக்கடைகள் மற்றும் காலணி விற்பனை நிலையங்களில் வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், மவுண்ட்ரோடு பகுதியில் நேற்று மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மார்க்கெட் பகுதியில் வியாபாரம் களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்ப்பதற்காகப் பெற்றோர்கள் பலரும் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.