பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இயங்கி வரும் ரோப்கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் ரோப்கார் சேவை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைப் பணிகளுக்காக கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ரோப்கார் இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து என்.டி.டி. (NDT) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொல்கத்தாவில் இருந்து புதிய ஷாஃப்ட் (Shaft) வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.
மேலும், கியர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு, மணல் மூட்டைகள் வைத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதனுடன் ரோப்கார் கீழ்நிலைய பகுதியில் புதிய மேற்கூரை, ஃபால் சீலிங் அமைப்பு மற்றும் பக்கவாட்டுச் சுவர்களில் கிரானைட் பதிக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
வல்லுநர் குழுவின் ஆய்வு மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்படும் என கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


