மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நடைமுறையில் உள்ள கட்டணமில்லா தரிசன முறை, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக பெருவிழா செப்டம்பர் 17-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் 17 முதல் 20-ஆம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசன வசதி ஏற்படுத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் சீராகவும் விரைவாகவும் தரிசனம் செய்யும் வகையில் கட்டணமில்லா தரிசனத்தை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 23-ஆம் தேதி வரை பக்தர்கள் இலவசமாக சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


