தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர்கள் கருத்து
திருப்பூர் அருகே சமூக ஆர்வலர் கே.பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், சாமாளாபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவரும் திமுக பிரமுகருமான விநாயக பழனிச்சாமிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
*புகார் அளித்ததால் ஏற்பட்ட முன்விரோதம்*
திருப்பூர் மாவட்டம் சாமாளாபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.பழனிச்சாமி (57), கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற சாலைப் பணியில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பேரூராட்சி நிர்வாகப் பொறியாளரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, அப்போதைய சாமாளாபுரம் பேரூராட்சித் தலைவர் விநாயக பழனிச்சாமி (62) மற்றும் சமூக ஆர்வலர் பழனிச்சாமி இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
*கார் மோதி உயிரிழப்பு*
2025 செப்டம்பர் 10-ஆம் தேதி கோரமடை – சோமனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பழனிச்சாமி மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தொடக்கத்தில் விபத்து என கருதப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக, பழனிச்சாமியின் மகன் சுகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விநாயக பழனிச்சாமி கைது செய்யப்பட்டார்.
*சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டம்*
இந்த சம்பவத்தைக் கண்டித்து, மனித உரிமை அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் சாமாளாபுரத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
*நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு*
இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, விநாயக பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
*சமூக ஆர்வலர்கள் வரவேற்பு*
சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டம் மற்றும் களப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு, சமூக நலனுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறினர்.


