வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் (Fitness Certificate) பெறும்போது, ஒவ்வொரு முறையும் புதிதாக பிரதிபலிப்பு டேப் (Reflective Tape) ஒட்ட வேண்டும் என்ற நடைமுறை இனி இல்லை என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

வாகனங்களில் பொருத்தப்படும் பிரதிபலிப்பு டேப் தொடர்பாக, இதுவரை rtvsta.tn.gov.in இணையதளம் மூலம் சான்றிதழை சரிபார்க்கும் நடைமுறை அமலில் இருந்தது. தற்போது அந்த நடைமுறை முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அலகு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தலில், இனி RTO அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணையதளம் மூலம் பிரதிபலிப்பு டேப் சான்றிதழை சரிபார்க்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃபிட்னஸ் சான்றிதழ் பெற வரும் ஒவ்வொரு வாகனத்திற்கும் புதிதாக பிரதிபலிப்பு டேப் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பிரதிபலிப்பு டேப் நல்ல நிலையில் இருந்தால் அதை தொடர்ந்து பயன்படுத்தலாம். அது சேதமடைந்திருந்தாலோ, உரிந்து போயிருந்தாலோ அல்லது ஒளி பிரதிபலிக்கும் தன்மையை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் மாற்றினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையின் இந்த புதிய நடைமுறை, வாகன உரிமையாளர்களுக்கு தேவையற்ற செலவு மற்றும் சிரமத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பிரதிபலிப்பு டேப் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version