நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக மயில்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
முன்பு சமவெளிப் பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்பட்ட மயில்கள், தற்போது குன்னூர், ஜெகதளா, காட்டேரி, கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படுவது இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம், உணவு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பது, மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் தானியங்கள் மற்றும் உணவுக் கழிவுகள் எளிதில் கிடைப்பது ஆகிய காரணங்களால் மயில்கள் புதிய வாழிடங்களைத் தேடி மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.
மேலும், நீலகிரியின் குளிர்ச்சியான காலநிலை, பசுமை வளம் மற்றும் நீராதாரங்கள் அவற்றுக்கு ஏற்ற வாழிடமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் தோகையை விரித்து மயில்கள் ஆடும் காட்சியைப் பார்ப்பதற்காக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக மழைக்காலத்தில் மயில்களின் தோகை விரித்தாட்டம் புகைப்படக் கலைஞர்களையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதேநேரத்தில், மயில்களுக்கு பொதுமக்கள் உணவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மனிதர்களைச் சார்ந்த உணவுப் பழக்கம் அவற்றின் இயற்கையான வாழ்வியல் முறையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், இயற்கைச் சூழலில் சுதந்திரமாக வாழ அனுமதிப்பதே அவற்றின் பாதுகாப்புக்கு உகந்தது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவது, சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் உயிரினப் பன்மை வளர்ச்சியை சுட்டிக்காட்டும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
எனவே, மயில்களின் வாழிடங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் செயல்படுவதிலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

