தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள, அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘திரிகுணகிரி சமண மலை’ பகுதிக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
திரிகுணகிரி சமண மலை சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பண்டைய காலத்தில் சமணத் துறவிகள் கல்வி, மருத்துவம், அன்னதானம் மற்றும் அறிவுத்தானம் ஆகியவற்றை மக்களுக்காக வழங்கிய முக்கிய மையமாக திகழ்ந்துள்ளது.
இங்கு மகாவீரர், பார்சுவநாதர் உள்ளிட்ட சமண முனிவர்களின் அரிய புடைப்புச் சிற்பங்களும், பாண்டிய மன்னர்கள் இச்சமணப் பள்ளிக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த வரலாற்று வழிகாட்டும் கல்வெட்டுகளும் நிறைந்துள்ளன.
தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ள இம்மலையில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளன. சமூக விரோதச் செயல்களாலும் தொன்மையான சிற்பங்கள் சேதமடையும் அபாயம் எழுந்துள்ளது.
ஆய்வுக்குப் பின் பேசிய கம்பம் எம்.எல்.ஏ பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, “இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது பண்பாட்டையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது அவசியம். திரிகுணகிரி சமண மலையை மீட்டெடுத்து, முறையான பாரம்பரியப் பாதுகாப்பு மையமாக மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
நமது முன்னோர்களின் அறிவுக்கும் வாழ்க்கை முறைக்கும் சான்றாக விளங்கும் திரிகுணகிரி சமண மலையைச் சுற்றுலாத் தலமாகவும், கல்வி மையமாகவும் மேம்படுத்த அரசு, தொல்லியல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாகும்.

