திருப்பூர் மாநகராட்சி, மண்டலம் 4, 42-வது வார்டுக்கு உட்பட்ட ‘நார்த் கார்டன்’ (North Garden) பகுதியில், பொது இடத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிய ஒருவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொது இடங்கள், சாலை ஓரங்கள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், நார்த் கார்டன் பகுதியில் சட்டவிரோதமாகத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சுகாதார அலுவலர் தினேஷ் தலைமையிலான குழுவினர், TN 39 CJ 0565 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைப் பொது இடத்திற்குக் கொண்டு வந்தவர்களைப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டன.
மீண்டும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
திருப்பூர் நகர்ப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க, 24 மணி நேர ரோந்துப் படைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

